odi odi utkalantha jothiyai ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

சிவவாக்கியம் பாடல்கள் சிவவாக்கிய சித்தர் ஆல் எழுதப்பட்டது இப்பதிவில் நாம் முக்கியமான சிவவாக்கிய பாடல்களைக் காண்போம். அதை pdf பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

ஓம் நம : சிவாய ஓம்     ஓம் நம : சிவாய
ஓம் நம : சிவாய ஓம்     ஓம் நம : சிவாய

சரியை விலக்கல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை 
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள் 
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)

ஞான நிலை

என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே  ( ஓம் )

இதுவுமது

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமே ( ஓம் )

யோக நிலை 

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் 
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ( ஓம்)

விராட்சொரூபம்  

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமான மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம் 
உடல் கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ  ( ஓம்)

தெய்வ சொரூபம்

உருவுமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்ற நேர்மையாவர் காணவல்லரோ ( ஓம் ) 

தேகநிலை கூறல்

மண்கலங்கவிழ்ந்தபோதுவைத்துவைத்து அடுக்குவார் 
வெங்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நம்கலங்கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயமென்ன மாய மீசனே ( ஓம் )

அக்ஷர நிலை

ஆனவ ஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவ ஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவ ஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவ ஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே ( ஓம்)

இதுவுமதி

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் 
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே  ( ஓம்)

ஞானநிலை 

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை 
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை 
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை( ஓம்)

ஞானம் 

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம் பொன்னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ( ஓம்)

அக்ஷர நிலை 

அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)

பிரணவம் 

மூன்று மண்டலத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் 
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை 
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய் நாதனே  (ஓம்)

கடவுளின் உண்மை கூறல் 

இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகான
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை யல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோரினிப் பிறப்பதிங்கில்லையே (ஓம்)

இராம நாம மகிமை 

கார கார கார கார காவல் ஊழி காவலன் 
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் 
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த சீர்
ராம ராம ராம ராம என்னும் நாமமே( ஓம் )

அத்துவிதம்

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் 
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்  
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் 
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ( ஓம் ) 

அம்பலம்

அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் 
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் 
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் 
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே ( ஓம் )

பஞ்சாட்சரம் 

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே 
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே 
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் 
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின் 
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம் நம சிவாயமே உட்கலந்து நிற்குமே ( ஓம் ) 

Comments

Popular Posts